ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு என்ன வாழ்வாதாரம் தருவீர்கள்... பிரதமருக்கு வேல்முருகன் கேள்வி

சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு என்ன வாழ்வாதாரம் தருவீர்கள் என்றும் இதுவரை அதைப்பற்றி ஏன் ஒரு முறை கூட தொலைக்காட்சியில் பேசவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். மேலும், தற்போது உள்ள சூழலில் பி.எம். கேர் நிதியிலிருந்து ஒரு பைசா கூட பிரதமர் மோடி எடுத்து தர மறுப்பது ஏன் என அவர் வினவியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;


அறிவுரைகள் போதாது 
கொரோனாவுக்காக நேற்றுடன் நாலு தடவை தொலைக்காட்சியில் உரையாற்றிவிட்டார் மோடி. நாலு தடவையுமே அவர் கூறியவை ஆலோசனைகள், கட்டளைகள், எச்சரிக்கைகள்தான். மருத்துவ வசதிகள், கருவிகள், நிதிகள், மக்களுக்கான வாழ்வாதாரங்கள் பற்றி மூச்சே விடவில்லை. கூட்டாட்சி நாடான இந்தியாவில் மத்தியில் மாநிலங்களின் பிரதிநிதித்துவ நிர்வாக அமைப்புதான் இருக்க வேண்டுமே ஒழிய, ஒன்றிய அரசு என்ற ஒன்று இருப்பதே மகா தெண்டம்.

ஜி எஸ் டி
 மாநில மக்கள் வருந்தி உழைத்து சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் ஜிஎஸ்டி என்ற பேரில் கபளீகரம் செய்கிறது ஒன்றிய அரசு. அதில் பாதிக்கு மேல் 55 விழுக்காட்டை எடுத்துக்கொண்டு 45 விழுக்காட்டைத்தான் மாநிலங்களுக்கு வழங்குகிறது. அந்த 45 விழுக்காடும் கூட, முழுசாக, முறையாகத் தரப்படுவதில்லை. இந்தக் கொரோனா சமயத்தில் தமிழ்நாடு அதைப் பல முறை கேட்டுப்பார்த்தும் தந்தபாடில்லை.


தர மறுப்பது ஏன்?
 இத்தனைக்கும் ‘பிரதமர் நிவாரண நிதி' என்ற கல்லாப்பெட்டி ஏற்கனவே உள்ளது. அது தவிர, ‘பிஎம் கேர்' என்கிற புது கல்லாப்பெட்டியையும் செய்து வைத்துள்ளார் மோடி. இவைகளில் எக்கச்சக்கமாக பணம் உள்ளது. இவற்றிலிருந்து ஒரு பைசாவைக் கூட இந்தக் கொரோனா ஆபத்து நேரத்திலும் எடுத்துத் தர மறுக்கிறார்.

தானிய மூட்டைகள்

 நன்கறிந்த பொருளியல் நிபுணர்களான ரகுராம் ராஜன், அபிஜித் பானர்ஜி, பிரபாத் பட்நாயக் ஆகியோர், "இத்தனை நாள் ஊரடங்கின்போதும் சரி, மேலும் அதை நீட்டித்தபோதும் சரி, நலத்திட்டங்கள் எதையுமே அறிவிக்கவில்லை. அரசிடம் பணம், உணவுப் பொருட்கள் அபரிமிதமாக இருந்தும் கூட மக்களுக்கு உதவவில்லை" என்கின்றனர். மத்திய கிட்டங்கிகளில் தேங்கிக் கிடக்கும் உணவு தானிய மூட்டைகள் எலிகளுக்கும் பெருச்சாளிகளுக்குமே தவிர மனிதர்களுக்கில்லை!

© All Copyrights NEW TREND MEDIA PRIVATE LIMITED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited