கொரோனா தடுப்பு நடவடிக்கையில்.. அணுகுமுறையை மாற்றுங்கள்.. கே.எஸ்.அழகிரி கோரிக்கை

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் பிரதமர் மோடி தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் ஏற்படப் போகும் பேரழிவில் இருந்து மக்களை பாதுகாக்க உரிய செயல்திட்டத்தை போர்க்கால அடிப்படையில் பிரதமர் மோடி அறிவிக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

 பாதிப்பு அதிகம்
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளை அச்சுறுத்தி பீதியில் ஆழ்த்தி வரும் கொரோனா நோயை தடுப்பதற்காக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சமூக விலகல், தனிமைப்படுத்துதல் என்கிற அணுமுறையின் மூலமாக கொரோனா நோயை எதிர்கொள்ள முடியும் என்று மத்திய, மாநில அரசுகள் கருதுகின்றன. எதிர்கட்சிகளுடன் பிரதமர் மோடி நடத்திய ஆலோசனையின் விளைவாக ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகும் மக்கள் ஊரடங்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் ஊரடங்கு மேலும் நீடித்தால் இதனால் ஏற்படுகிற பாதிப்புகளை குறித்து மத்திய, மாநில அரசுகள் தீவிர கவனம் செலுத்தவேண்டும் .

ஜவுளித்தொழில்
கைத்தறி நகரம் என்று அழைக்கப்படுகிற கரூர் பகுதியில் மட்டும் ரூபாய் 1000 கோடி மதிப்புள்ள ஜவுளி துணிகள் தேங்கி கிடக்கின்றன. ஏற்றுமதி ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உற்பத்தி செய்த ஜவுளி துணிகளை எப்படி விற்பது? எங்கே விற்பது? என்று தெரியாமல் ஜவுளி உற்பத்தியாளர்கள் விழிபிதுங்கி நிற்கிறார்கள். அதேபோல திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி தொழிலில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பவர்கள் ட்ரக் வாகன ஓட்டுனர்கள் ஆவார்கள். இவர்கள் எண்ணிக்கை 30 லட்சம் என்று கூறப்படும் நிலையில் அவர்கள் வேலைவாய்ப்பை இழந்திருக்கிறார்கள். இவர்களது 3 மாத ஊதிய இழப்பை ஈடுகட்ட ரூபாய் 25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கவேண்டும்.

பாரபட்சம்
இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. கொரோனாவை எதிர்கொள்ள தமிழகம் ரூபாய் 16 ஆயிரம் கோடி மத்திய அரசை கோரியது. ஆனால் மத்திய அரசு வழங்கியது ரூபாய் 510 கோடி தான். தமிழகத்திற்கு பாரபட்சமான முறையில் குறைவான நிதி ஒதுக்கியது குறித்து விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இதில் குறைவாக பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களுக்கு அதிக நிதியும், அதிகமாக பாதிக்கப்பட்ட தமிழகம் புறக்கணித்திருப்பதும் சுட்டிக்காட்டியிருக்கிறது. மத்திய பா.ஜ.க. அரசால் தமிழகம் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து தமிழக ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை.

போர்க்கால அடிப்படையில் 
விவசாயிகள், லட்சக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கிற வகையில் பிரதமரின் உரையில் எதுவும் குறிப்பிடாதது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மக்கள் ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. விவசாயிகள் உறப்த்திசெய்த பொருளை அறுவடை செய்ய முடியவில்லை. இனியாவது அணுகுமுறைகளை மாற்றி மக்களை பேரழிவிலிருந்து பாதுகாக்க உரிய செயல்திட்டத்தை பிரதமர் மோடி போர்க்கால அடிப்படையில் அறிவிக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
  
            © All Copyrights NEW TREND MEDIA PRIVATE LIMITED 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited