மே 3ம் தேதி வரை ஊரடங்கில் ஒரு தளர்வும் கிடையாது.. இதே நிலை அப்படியே தொடரும்.. தமிழக அரசு அதிரடி

 சென்னை: தமிழகத்தில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என்றும் தற்போதைய நிலையே தொடரும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.. கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24ம் தேதி நள்ளிரவு தொடங்கி ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இந்த ஊரடங்கின் போது காய்கறி, பால், மளிகை, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் அத்தியாவசிய கடைகள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது, சிறுகுறு தொழில்கள் அனைத்தும் முடங்கி உள்ளன. மக்கள் வேலைக்கு செல்லாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். வருவாயை இழப்பால் பலர்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


நிறுவனங்கள் பாதிப்பு

 இந்நிலையில் ஏப்ரல் 14ம் தேதி தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஊரடங்கு , கொரோனா வேகமாக பரவுவதன் காரணமாக மே3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பால் அன்றாடம் பிழைப்பு நடத்தி வரும் மக்கள் சிறிய வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.


கூலி வேலை செய்வோர் 
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்து அறிவிக்கை வெளியிட்டது. இதன்படி தொழில் நிறுவனங்கள், விவசாய வேலைகள், நெடுஞ்சாலை உணவங்கள், வாகனம் பழுது பார்க்கும் கடைகள், இயந்திரம் பழுதுபார்க்கும் கடைகள், வேளாண் கருவி விற்பனை செய்யும் கடைகள், உரவிற்பனை நிலையங்கள் உள்பட முக்கிய தொழில்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


தற்போதைய நிலை தொடரும்

 இந்த அறிவிப்பு தொழில்துறை, தொழிலாளர்கள் மத்தியில் வரவேற்பைபெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை தளர்த்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (திங்கள்கிழமை) முடிவு செய்வார் என்று தமிழக அரசு அறிவித்தது. அதுவரை தற்போதைய நிலையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.


ஏப்ரல் 20ம் தேதி 

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில, மத்திய அரசு கடந்த ஏப்ரல் 15ம் தேதி வெளியிட்ட ஆணையில் எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகளை ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு செயல்பட அனுமதிக்கலாம் என்று மாநில அரசுகள் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.கட்டுபாடுகள் தொடரும் 
இதற்கென தமிழக அரசு சார்பில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தனது முதல் கட்ட கூட்டத்தை நடத்தி , அது தொடர்பாக முதல்வரிடம் ஏப்ரல் 20ம் தேதி தெரிவிக்க உள்ளது. அதன் அடிப்படையில் முதல்வர் முடிவெடுக்க உள்ளார். எனவே இதுகுறித்து தமிழக அரசு ஆணைகள் வெளியிடப்படும் வரை தற்போது உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

மே 3வரை தொடரும் 

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் அதிகரித்துவரும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மே 3ம் தேதி வரை தற்போதைய நிலையே தொடரும் என்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

     செய்தியாளர்: அமர்நாத்.R
    பட்டாபிராம்,  சென்னை
©All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED Reserved
Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited