கொரோனா ஆரம்ப அறிகுறிகள் உள்ளவர்களுக்காக ரயில் பெட்டிகள் தனிமை வார்டுகளாக மாற்றம்.. ரயில்வே

சென்னை: கொரோனா ஆரம்ப கட்ட அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மட்டுமே ரயில் பெட்டிகள் பயன்படுத்தபட உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது
கொரோனா தடுக்கும் நடவடிக்கை நாடெங்கும் மேற்கொள்ளப்படும் நிலையில், ரயில் பெட்டிகளைத் தனிமைப்படுத்துதல் வார்டுகளாக மாற்றும் பணியும் நடைபெறுகிறது. இதில் 5000 ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், ரயில்கள் மற்றும் பணிமனைகள் ஏற்கனவே போதிய சுகாதாரம் இல்லாமல் இருக்கும் நிலையில், கொரோனா தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு இன்று மீண்டும் விசாரணை வந்தது. அப்போது தென்னக ரயில்வே சார்பில் வழக்கறிஞர் ராம்குமார் ஆஜராகி, ரயில் பெட்டிகள் மருத்துவமனையாக மாற்ற படுவதில்லை என்றும் தனிமைப்படுத்தும் வார்டுகளாக மட்டுமே மாற்றப்பட உள்ளதாக தெரிவித்தார். .அதிக அளவில் பாதிப்பு ஏற்படும்போது மற்ற மருத்துவமனைகள் எல்லாம் பயன்படுத்தபட்ட பிறகே, ரயில் பெட்டிகள் வார்டுகளாக மட்டும் பயன்படுத்தப்படும் என தெரிவித்தார். மருத்துவமனை இல்லாத கிராமங்களில் பாதிப்பு ஏற்பட்டால் அங்கு அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு இந்த பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டு முதற்கட்ட அறிகுறி உள்ளவர்கள் மட்டுமே அதில் தனிமைப் படுத்தப் படுவார் என்றும் அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டால்,அருகில் உள்ள மருத்துவனைக்கு மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்திலும் இந்த தகவலை தெரிவித்துள்ளதாகவும் அவர் வாதிட்டார். இதையடுத்து நீதிபதி வைத்தியநாதன் இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
  
    © All Copyrights NEW TREND MEDIA PRIVATE LIMITED 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited