வேலுாரில் கள்ளச்சாராயம் துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயம்

வேலுார் : வேலுார் அருகே, கள்ளச்சாராயம் விற்பனை சக்கை போடு போடுகிறது. விற்பனையை தடுத்தவர்கள் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தியதில், மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.வேலுார் மாவட்டம், புலிமேட்டில் இருந்து, வல்லண்டப்பன் கோவிலுக்கு செல்லும் மலை அடிவாரத்தில், கள்ளச்சாராயம் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.தற்போது, டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், கள்ளச்சாராயம் குடிப்பதற்காக, 'குடி'மகன்கள், கூட்டம், கூட்டமாக வந்து செல்கின்றனர்.நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு, புலிமேடு பகுதியைச் சேர்ந்த பூபாலன், 25, பிரகாஷ், 22, உட்பட மூவர், கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களிடம், இது குறித்து தட்டி கேட்டனர். இதில், கள்ளச்சாராய கும்பலுக்கும், வாலிபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.அப்போது, ஆத்திரமடைந்த கள்ளச்சாராய விற்பனை கும்பல், அங்கு பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இதில், மூன்று வாலிபர்கள் மீதும் குண்டுகள் பாய்ந்து, படுகாயம் அடைந்தனர்.அவர்கள் அலறல் கேட்டு, அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்தனர். இதையடுத்து, கள்ளச்சாராய கும்பல், மலையில் ஏறி தப்பி விட்டது.அரியூர் போலீசார் வந்து, துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த மூன்று பேரையும் மீட்டு, வேலுார் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து, வழக்குப்பதிவு செய்து, கள்ளச்சாராய கும்பலை தேடி வருகின்றனர்.

பந்தலுாரில் ஒருவர் கைது : நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே, குந்தலாடி வாழவயல் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக, தோவலா, டி.எஸ்.பி., கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.அப்போது, வாழவயல் பகுதியில் சிரஞ்சீவி, 28, என்பவர், தன் வீட்டின் அருகே, மண்ணுக்கு அடியில் சாராய ஊறல் வைத்திருந்ததும், வடிகட்டப்பட்ட கள்ளச்சாராயத்தை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்ததும் தெரிந்தது. அவரை கைது செய்து, சாராய ஊறல் மற்றும் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
                  © COPYRIGHTS NEWTRENDMEDIA ALL RIGHTS RESERVED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited