விவசாயிகள் நலனுக்காக பல திட்டங்கள் அறிவிப்பு! விளை பொருட்களை விற்க அழைப்பு

சென்னை: விவசாயிகள் நலனுக்காக, கட்டணம் விலக்கு உட்பட, பல்வேறு சலுகைகளை, நேற்று முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார். விளைபொருட்களை சந்தைக்கு எடுத்து சென்று, விவசாயிகள் தாராளமாக விற்கலாம் என, தெரிவித்துள்ள முதல்வர், சிரமங்கள் இருந்தால், அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளதோடு, அவர்களின் தொலைபேசி எண் விபரங்களையும் பட்டியலிட்டுள்ளார்.

முதல்வர், இ.பி.எஸ்., நேற்று வெளியிட்ட அறிவிப்பு விபரம்: விவசாயிகள் உற்பத்தி செய்த, விளைபொருட்களை சந்தைக்கு எடுத்து சென்று, விற்பனை செய்வதில், சிரமங்கள் இருந்தால், மாவட்ட வேளாண் வணிகம் துணை இயக்குனரை தொடர்பு கொள்ளலாம்.

அனுமதி:
மாநில அளவில், 044 -- 2225 3884, 2225 3885, 2225 3496, 95000 91904 ஆகிய எண்களில், காலை, 10:00 முதல், மாலை, 6:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம். சம்பந்தப்பட்ட அலுவலர்கள், விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு, வியாபாரிகளை தொடர்பு கொள்ளுதல், சரக்கு போக்குவரத்துக்கான அனுமதியை, மாவட்ட நிர்வாகத்திடம் பெற்று தருதல், 'ஏசி' வசதியுள்ள கிடங்குகளுக்கு வழிகாட்டுதல் போன்ற சேவைகளுக்கு உதவி புரிவர்.

குளிர்பதன கிடங்குகளில், காய்கறிகள் மற்றும் பழங்களை சேமித்து வைக்க, விவசாயிகளிடம் பயன்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போதுள்ள சூழ்நிலை கருதியும், இன்னும், 15 நாட்களில், மாம்பழம் உற்பத்தி அதிகரிக்கும் என்பதாலும், விவசாயிகளிடம் இருந்து, வரும், 30 வரை, பயன்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படாது. இக்கட்டண தொகை முழுவதையும், தமிழக அரசே ஏற்கும்.

காய்கறிகள் மற்றும் பழங்களை சேகரித்து, வினியோகம் செய்ய முன்வரும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு, அதிகபட்சமாக, 10 லட்சம் ரூபாய் வரை, கடனாக வழங்கப்படும்.

விற்பனை:
கூட்டுப் பண்ணைய விவசாயிகள் வழியே, உற்பத்தி செய்யப்படும், காய்கறிகள் மற்றும் பழங்கள், நகர்ப்புறங்களில் உள்ள நுகர்வோருக்கு, அவர்கள் இருப்பிடம் அருகிலேயே, கூடுதலாக, 500 தோட்டக்கலை துறை நடமாடும் வாகனங்களில், விற்பனை செய்யப்படும். தற்போது, விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்யும்போது, வியாபாரிகளிடம் விற்பனை மதிப்பில், 1 சதவீதம் சந்தை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இக்கட்டணத்தை, வரும், 30ம் தேதி வரை செலுத்த வேண்டியதில்லை.

விவசாயிகள் மற்றும் வியாபாரிகள், அரசு அறிவித்துள்ள வசதிகளை பயன்படுத்தி, தமிழக மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், எவ்வித தடையுமின்றி கிடைக்க உதவ வேண்டும். இவ்வாறு, முதல்வர் கூறியுள்ளார்.
தனியார் கிடங்குகளிலும் கட்டணமின்றி இருப்பு வைக்க வசதி?
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், விளைபொருட்களை சந்தைக்கு எடுத்து செல்வதில், பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இதற்கு தீர்வு காண, மாவட்ட வேளாண் வணிகப்பிரிவு துணை இயக்குனர்களை தொடர்புக் கொள்ளலாம் என, முதல்வர் அறிவித்துள்ளார். இதற்காக, மாவட்ட வாரியாக அதிகாரிகளின் எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. குளிர்பதன கிடங்குகளில், காய்கறிகள் மற்றும் பழங்களை பாதுகாப்பதற்கான கட்டணம், இம்மாதம், 30ம்தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

அதேநேரம், வேளாண் விற்பனை மற்றும் வணிகப்பிரிவு வாயிலாக, மாநிலத்தில், கோவை, கடலுார், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட, 26 மாவட்டங்களில், 111 குளிர்பதன கிடங்குகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் மொத்தமாக, 13 ஆயிரத்து, 565 டன்கள் மட்டுமே பதப்படுத்தி வைக்க முடியும். பல கிடங்குகளில், 25 டன்கள் மட்டுமே பதப்படுத்த முடியும். ஓரிரு கிடங்குகளில் மட்டுமே, 1,000 முதல், 2,000 டன்கள் வரை இருப்பு வைக்க முடியும்.

பல மாவட்டங்களில் குறைந்த அளவிலான கிடங்குகள் இருப்பதால், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு, பொருட்களை எடுத்து செல்வதில் விவசாயிகளுக்கு பிரச்னை உள்ளது. எனவே, ஊரடங்கு உத்தரவு முடியும் வரை, தனியார் கிடங்குகளில், கட்டணம் இன்றி பொருட்களை இருப்பு வைக்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    © All Copyrights NEW TREND MEDIA Reserved

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited