ஊரடங்கை மீறினால், '2 ஆண்டு' சிறைபுதுடில்லி : 'ஊரடங்கு உத்தரவை மீறி, வெளியில் நடமாடுவோர் அல்லது பொய் தகவல்கள் கூறி ஊர் சுற்றுவோர் மீது, சட்டப்படி வழக்குப் பதிவு செய்து, சிறையில் தள்ள வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, மத்திய உள்துறை செயலர் அஜய் பல்லா, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதன் விபரம்:கடந்த மார்ச், 24ல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, விதிகளை மீறுவோர் மீது, இந்திய தண்டனை சட்டம், 188 பிரிவுடன், 2005ம் ஆண்டின், பேரிடர் மேலாண்மை சட்டம், 51 - 60 பிரிவுகள் வரை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த சட்டப் பிரிவுகள், ஊரடங்கு உத்தரவை மீறி, வெளியே நடமாடுவோர் அல்லது பொய் தகவல்களை அளித்து, ஊர் சுற்றுவோருக்கு, அபராதத்துடன், இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க, வகை செய்கிறது. எனவே, இந்தச் சட்டங்கள் மற்றும் தண்டனை விபரங்கள் குறித்து, பொதுமக்களுக்கு தெரிவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊரடங்கை மீறி வெளியே செல்வோர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்து, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.பேரிடர் போன்ற தற்போதைய சூழலில், அளவிற்கு அதிகமான பணம் அல்லது பொருட்களை பதுக்குவோருக்கும், அபராதத்துடன், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்க, சட்டம் வகை செய்கிறது.

ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும் அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுப்போருக்கு, அபராதத்துடன், ஓராண்டு சிறை தண்டனை கிடைக்கும். மேலும், அவ்வாறு தடுக்கும் போது உயிரிழப்பு அல்லது உயிருக்கு ஆபத்தான சூழல் ஏற்படும் பட்சத்தில், இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்படும். உயரதிகாரியின் அனுமதியின்றி, அரசு அதிகாரிகள், தங்களுக்கு வழங்கப்பட்ட பணியை மேற்கொள்ளாமல் இருந்தாலோ அல்லது மறுத்தாலோ, பணியில் இருந்து தன்னிச்சையாக விலகினாலோ, சிறை தண்டனை வழங்க, பேரிடர் சட்டம் வகை செய்கிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
        © COPYRIGHTS NEWTRENDMEDIA ALL RIGHTS RESERVED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited