லாக்டவுன் நீட்டிப்பை விட.. அனைவரும் எதிர்பார்த்தது "இதை"தான்.. ஆனால் மோடி அதை அறிவிக்கவே இல்லையே

சென்னை: என்ன எதிர்பார்த்து அனைவரும் காத்திருந்தோமோ, அது ஏமாற்றம் தந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.. நிதி நெருக்கடியால் சிக்கி தவிக்கும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான எந்தவிதமான நிதி அறிவிப்பினையும் பிரதமர் அறிவிக்காதது ஏனோ மீண்டும் ஏமாற்றத்தையே தந்துள்ளது!

கொரோனா நாட்டிற்குள் நுழைந்தது முதல் இப்போது வரை பிரதமர் மோடி 4 முறை மக்களிடம் உரையாற்றி உள்ளார்.. ஒவ்வொரு முறை அவர் உரையாற்றும்போதும் பெரும் எதிர்பார்ப்புடன் இந்தியாவே ஆவலாகிவிடும்.. விவசாயிகள், தொழிலாளிகள் முதல் அனைத்து தரப்பினரும் காதுகளை தீட்டி கொண்டு உட்கார்ந்து விடுவார்கள்.

இதற்கெல்லாம் காரணம், வைரஸ் பற்றின பீதியைவிட தினந்தோறும் பிழைப்பினை எப்படி பசியில்லாமல் ஓட்டுவது என்பதுதான்.. இந்த கவலை தனிமனிதனுக்கு மட்டும் என்றில்லை, நம் மாநில அரசுக்கே உள்ள நிலைமையும் இது!

நிர்ப்பந்தம் 
ஆனால் 4 முறை பிரதமர் பேசியதில் 2 முறை ஊரடங்கு குறித்து, ஒரு முறை கை தட்டுதல், இன்னொரு முறை விளக்கு ஏற்றுதல்.. இவை நான்கையுமே நம்மால் குறைசொல்லி ஒதுக்கிவிட முடியாது.. இவை நமக்கு அத்தியாவசியம்.. கட்டாயம்.. நிர்ப்பந்தம்.. வேறு வழியில்லாத நிலை.. போன்ற காரணங்களுக்காக அனைவரும் ஏற்று நடந்தோம்.. இனியும் பிரதமர் பேச்சுக்கு கட்டுப்பட்டும் நடப்போம்.. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.. ஆனால் எதிர்பார்ப்புகள்தான் பொசுங்கி கொண்டிருக்கின்றன!!

தமிழ்நாடு
 நிதியமைச்சர் அறிவித்தபோது இந்தியாவில் அவ்வளவாக தொற்று பாதிப்பு இல்லை, உயிரிழப்பும் குறைவுதான்.. ஆனால் இப்போது நிலைமை மாறி உள்ளது.. பாதிக்கப்பட்ட ல மாநிலங்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.. இதில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது.. இந்த சூழலிலும் நிதி ஒதுக்காதது வருத்தம் அளிக்கிறது.


கோரிக்கை 
தமிழ்நாட்டிற்கு 7500 கோடி தேவைப்படுகிறது.. அதனால் குறைந்தபட்சம் முதல்கட்டமாக 3500 கோடியை ஒதுக்க வேண்டும் என்று நம் முதல்வர் பிரதமரிடம் கோரிக்கை வைத்ததாகவும் கூறப்பட்டது.. ஆனால் இதுவரை நமக்கு 800+ கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது.. அதுகூட ஏற்கனவே இயற்கை பேரிடர் நிதியில் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டு நிலுவையில் இருந்துதான் ஒதுக்கப்பட்ட தொகையே தவிர, புதிதாக எதுவும் ஒதுக்கப்படவில்லை.

நெருக்கடி
 ஆனால் தொற்று பாதிப்பு அவ்வளவாக இல்லாத உபிக்கு ஒதுக்கப்பட்ட நிதியோ பல மடங்கு அதிகம்.. இதுபோன்ற நெருக்கடி சமயத்தில் மாநில அளவிலான ஒப்பீடுகள் தேவையில்லை என்றாலும்கூட பாதிப்பு அதிகமுள்ளது தமிழகம் என்பதால் இப்படி ஒப்பிட்டு பார்க்க வேண்டி உள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலம் என்ற தன்மையுடன் இந்த விஷயத்தை இனியும் அணுகாமல் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்புமாக உள்ளது.


கருவிகள்
 அதேபோல, அனைவருக்கும் தொற்றினை டெஸ்ட் செய்ய வேண்டிய நிலையில் தமிழகம் உள்ளது.. ஆனால் அதற்கான கருவிகள் நம்மிடம் உள்ளதா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.. நேற்று வரை 10 ஆயிரம் + டெஸ்ட்கள்தான் நாம் செய்திருக்கிறோம் என்று கணக்கு சொல்லப்படுகிறது.. நடந்து முடிந்த ஊரடங்கில் வெறும் 10 ஆயிரம் பேருக்குதான் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது என்றால், இப்போது போடப்பட்டுள்ள அடுத்தக்கட்ட ஊரடங்கில் எத்தனை பேருக்கு நம்மால் டெஸ்ட் எடுக்க முடியும் என்ற சந்தேகமும் எழுகிறது.


சாத்தியமா? 
அடுத்த 2, 3 நாட்களில் டெஸ்ட்டுக்கான கிட்-கள் நமக்கு கிடைத்துவிடும் என்று சுகாதாரத்துறை நம்பிக்கை அளித்துள்ளது என்றாலும், 8.5 கோடி மக்கள் உள்ள தமிழகத்தில் இது வரக்கூடிய 14 நாளில் எப்படி சாத்தியமாகும்? என்பதும் தெரியவில்லை. அதை பற்றின அறிவிப்பும் இப்போது எதுவும் வெளியிடப்படவில்லை.


எதிர்பார்ப்பு
 நாளைய தினம் விவசாயிகள், ஏழைகளின் நலனை கொண்டு புது அறிவிப்புகளை வெளியிட போவதாக பிரதமர் சொல்லி உள்ளதுதான் இப்போதைக்கு இருக்கும் ஒரே ஒரு நம்பிக்கை பிடிப்பு.. ப.சிதம்பரம் முதல் திருமாவளவன் வரை அனைவருமே கேட்டு கொண்டிருக்கும் ஒரே கோரிக்கை, ஏழை விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்பதுதான்.. அந்த வகையில் நாளைய தினத்துக்கான எதிர்பார்ப்பு நிமிடத்துக்கு நிமிடம் எகிறி வருகிறது!

© All Copyrights NEW TREND MEDIA PRIVATE LIMITED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited