ஊரடங்கிற்கு ஊறுவிளைவிக்கும் குழப்பங்களும்.. குளறுபடிகளும்..

சென்னை: கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பல்வேறு இடங்களில் குழப்பங்களும், குளறுபடிகளும் அரங்கேறி வருகின்றன.

கொரோனா வைரஸுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் ஊரடங்கை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. நாளையுடன் அதன் கெடு முடிவடையும் நிலையில் அதனை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிப்பது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களும் அரசுக்கு தங்களால் இயன்ற வரை ஒத்துழைப்பு நல்கி ஊரடங்கை கடைபிடித்து கொரோனாவுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர்.


இந்த சூழலில் திருமணம், இறப்பு, மருத்துவம் ஆகியவற்றுக்கு செல்பவர்கள் மாவட்ட ஆட்சியர்களிடமோ, மாநகராட்சி/நகராட்சி ஆணையர்களிடமோ அவசர பாஸ் பெற்றுக்கொள்ளும் நடைமுறை தமிழகத்தில் உள்ளது. இதனை நகர்புறத்தில் வசிக்கும் மக்கள் எளிதாக பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது போன்ற தேவைகளுக்கு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டுமானால் யாரிடம் அவசர பாஸ் பெறுவது எனத் தெரியாமல் விழிபிதுங்கி தவிக்கும் நிலையை காண முடிகிறது. தாசில்தார்கள் அவசர பாஸ் தரலாம் என்ற உத்தரவை கடந்த வாரமே திரும்பப் பெற்றுக்கொண்டார் தலைமைச் செயலாளர் சண்முகம். இதனால் என்ன சிக்கல் ஏற்படுகிறது என்றால் ஊரக பகுதியில் வசிப்பவர்கள் அவசர தேவைகளுக்காக பாஸ் பெற வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு செல்லும் வழிகளிலேயே காவல்துறையினரால் தடுக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்படுகின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் ஊரகப்பகுதி மக்கள் சரியான வழிகாட்டுதல்/வழிமுறைகளை எதிர்பார்க்கின்றனர்.

ஊரடங்கு காலத்தில் ஏற்படும் மற்றொரு குழப்பங்கள் என்னவென்றால், நரம்பியல் சிகிச்சைக்கோ, இதய நிபுணரிடமோ, அல்லது எலும்பு மருத்துவர்களிடமோ நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாதது தான். இரண்டு சக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு செல்லக்கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளதால், சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் சொந்த கார்களிலும், கார் இல்லாதவர்கள் வாடகை கார்களிலும் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். ஆனால் அவர்களும் வழிகளில் தடுத்து நிறுத்தப்பட்டு ஒரு சில இடங்களில் திருப்பி அனுப்பப்படுவதும், ஒரு சில இடங்களில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக காக்க வைத்துவிட்டு வழி விடுவதுமான அவலம் தொடர்கிறது.

     © All Copyrights NEW TREND MEDIA PRIVATE LIMITED 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited