தமிழகத்தில் ஏப்ரல் 30ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், மாண்புமிகு பாரத பிரதமருடனான கலந்தாய்வு கூட்டத்தின் நடவடிக்கைகளின் அடிப்படையிலும், உலக சுகாதார அமைப்பின் கருத்தின்படியும், மருத்துவ நிபுணர் குழு மற்றும் பொது சுகாதார வல்லுநர் குழுக்களின் பரிந்துரைகளின்படியும், மாநிலத்தில் ஊரடங்கை தளர்த்தினால், நோய்த் தொற்று அதிகரிக்க கூடும் என்பதை கருத்தில் கொண்டும், 11ம் தேதி, நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படியும், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005இன் படி, குற்றவியல் விசாரணை முறை சட்டம் பிரிவு 144படியும், 30-4-2020 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


இதன்காரணமாக 21 நாட்களில் எந்த மாதிரியான கட்டுப்பாடு நிலவுகிறதோ, அதே மாதிரியான கட்டுப்பாடு ஏப்ரல் 30ம் தேதி வரை நிலவும். ஏற்கனவே ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் எடப்பாடியார் வலியுறுத்தியிருந்தார். மற்ற மாநில முதல்வர்களும் கூட கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.ஆனால் கர்நாடகா, ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டித்த பிறகும் தமிழக முதல்வர் இதுகுறித்து அறிவிக்காமல் இருந்தார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர், ஊரடங்கு உத்தரவு குறித்து, தமிழக முதல்வர் தனது முடிவை உடனே தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். கமல்ஹாசன் இந்த விஷயத்தில், எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக சாடி ட்வீட் வெளியிட்டிருந்தார். ஸ்டாலினோ, அரசு செயல்படவில்லை என்றால், செயல்பட வைப்போம் என்று எச்சரித்தார். இந்த நிலையில் பிரதமர் மோடி நாளை காலை 10 மணிக்கு மக்களிடம் உரையாற்றுவதாக அறிவித்துள்ளார். அப்போதுதான் லாக்டவுன் நீட்டிப்பு பற்றி தெரியவரும் என நினைத்திருந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலையே, ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


  © All Copyrights NEW TREND MEDIA PRIVATE LIMITED 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited