ஊரடங்கிற்குள் ஒரு ஊரடங்கு.. சென்னையில் சகட்டுமேனிக்கு எகிறும் கொரோனா.. தவறு நடப்பது எங்கு?

சென்னை: சென்னையில் ஊரடங்கிற்குள் ஒரு ஊரடங்கு போட்டும் கொரோனா கட்டுப்பாடில்லாமல் பரவி வருவது தமிழகத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனாவை ஒழிக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து போராடி வருகிறது. இதற்கான தடுப்பு மருந்து வரும் செப்டம்பரில் தயார் நிலையில் இருக்கும் என கூறப்படுகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் முன் கூட்டியே ஊரடங்கை விதிக்க தவறிவிட்டன. சில நாடுகள் ஊரடங்கை விதித்தும் அதை மக்கள் பின்பற்றவில்லை.
இந்த நிலையில் இந்தியாவில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கம் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் ஏப்ரல் 1-ஆம் தேதி 110 பேர் பாதிக்கப்பட்டதுதான் உச்சபட்ச எண்ணிக்கையாக இருந்தது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு புதிய உச்சத்தை தொட்டுவிட்டது. அதிலும் சென்னையில் மட்டும் 103 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

13 பேருக்கு பிரைமரி கான்டாக்ட்

இந்த 103 பேரில் 13 பேருக்கு முதன்மை தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2058 பேராக உயர்ந்துள்ளது. இதில் 121 பேர் குழந்தைகள் ஆவர். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டேதான் வந்தது.

கொரோனா பாதிப்பு

இதனால் விரைவில் தமிழகம் கொரோனா இல்லாத மாநிலமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அத்தனை எதிர்பார்ப்பையும் நேற்று ஒரு நாள் நிலவரம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது. வரும் மே 3 ஆம் தேதியுடன் கொரோனாவுக்கான ஊரடங்கு உத்தரவு முடிவடைய உள்ளது.

ஊரடங்கிற்குள் ஒரு ஊரடங்கு

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கிற்குள் ஒரு ஊரடங்கை மாநில அரசு அமல்படுத்தியது. அதில் கொரோனா அதிகம் உள்ள சென்னை, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 4 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது போல் சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று வரை 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது.

கடுமையான கட்டுப்பாடுகள்

இத்தகைய கட்டுப்பாடுகள் விதித்தும் தமிழகத்தில் நேற்று மட்டும் 121 பேர் கொரோனாவால் பாதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஐஏஎஸ் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளில் வைரஸ் பாதிப்பு மிக அதிகமாக இருந்தது.

முதல்வர் வேதனை

முதலில் அங்கும் மக்கள் ஆபத்தை புரிந்து கொள்ளாமல் செயல்பட்டனர். ஆனால் தற்போது அரசு கூறும் வழிமுறைகளை கேட்டபிறகு, இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. ஆனால் தமிழகத்தில் பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது, மக்கள் சொல் பேச்சை கேட்பதில்லை என தெரிவித்திருந்தார். பெரும்பாலானோர் வீட்டுக்குள்ளேயே மக்கள் முடங்கி இருந்தும் கொரோனாவின் ஆட்டம் குறையாமல் உள்ளது அதிகாரிகளை விழிபிதுங்க வைக்கிறது.
   ©All Rights NEWSTARTREND PRIVATE LIMITED Reserved

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited