ரேஷன் கடைகளில் இலவச பொருட்கள்.. தொழிலாளர்களுக்கு மீண்டும் ரூ.1000 நிதியுதவி.. தமிழக முதல்வர் அதிரடி

சென்னை: தமிழகத்தில் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அத்துடன், ரேஷன் பொருட்கள் உட்பட பல நிவாரணங்கள் குறித்தும், அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து, எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பேரிடர் மேலாண்மை சட்டம் 2005இன் படியும், குற்றவியல் விசாரணை முறை சட்டம் பிரிவு 144ன் படியும், 30-4-2020 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது. நோய் தொற்றை தடுக்கும் நோக்கில், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005இன் படியும், குற்றவியல் விசாரணை முறை சட்டம் பிரிவு 144 படியும், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அனைத்துக் கட்டுப்பாடுகளும் தொடரும்.


விலையில்லை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், (சர்க்கரை, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவை தலா 1 கி.கி, எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி) நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும்.

மீண்டும் ரூ.1000 கட்டடத் தொழிலாளர்கள் உட்பட பதிவு பெற்ற அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கும், குடும்பம் ஒன்றுக்கு இரண்டாவது முறையாக ரூ.1,000 நிவாரண உதவி வழங்கப்படும். பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு, மே மாதத்திற்காக 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய் ஆகியவை விலையின்றி வழங்கப்படும்.


பேக்கரியில் பார்சல் மட்டுமே பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் வந்த கோரிக்கைகளை பரிசீலித்து தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலான காலத்தில் அடுமனைகள் (பேக்கரிகள்) இயங்க தடை இல்லை என்பதையும், ஏற்கனவே உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி அடுமனை கடைகளில் பார்சல் விற்பனைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் தெளிவுபடுத்தப்படுகிறது.

தொலை மருத்துவ முறை மேலும், சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள மக்கள், கொரோனா நோய் தொடர்பான தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள, டெலி மெடிசின் சொசைட்டி இந்தியா நிறுவனத்தில் பதிவு பெற்ற சிறந்த மருத்துவர்களைக் கொண்டு தொலை மருத்துவ முறை மூலம் உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு தெளிவு பெற, தமிழ்நாடு அரசு வழிவகை செய்துள்ளது.


வீட்டில் இருங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு குடும்பமும் பாதுகாப்பாக இருப்பதுதான், அம்மாவின் அரசுக்கு மிகவும் முக்கியமானது. ஆகவே, தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் பின்பற்றி, விழித்திருங்கள், விலகி இருங்கள், வீட்டில் இருங்கள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், சமூக இடைவெளியை கடைபிடித்து, கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று, தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


 © All Copyrights NEW TREND MEDIA PRIVATE LIMITED 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited