அம்பேத்கர் படத்திற்கு ஸ்டாலின் மரியாதை... 20 நாட்களுக்கு பிறகு அண்ணா அறிவாலயம் வந்த ஸ்டாலின்

சென்னை: அம்பேத்கரின் 129-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதனிடையே அம்பேத்கர் பற்றி தனது முகநூல் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள ஸ்டாலின், சமத்துவம் என்ற உணர்வையும், தத்துவத்தையும், அரசியலமைப்புச் சட்டம் மூலம் உறுதிபடுத்தியவர் அண்ணல் அம்பேத்கர் என்றும், அவரது கொள்கைகளையும், இலக்குகளையும் நினைவுகூர்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.


மேலும், அறிவையும், கல்வியையும் ஆயுதமாக்கி முன்னேறுவதற்கு வழிகாட்டிய மாமேதை அம்பேத்கர் என்றும், சமத்துவம், ஜனநாயகம் ஆகிய இரண்டையும் தமது இரண்டு கண்களாக போற்றியவர் அம்பேத்கர் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அம்பேத்கர் காண விரும்பிய இலக்கை அவர் பாதையில் அடைய உறுதியேற்போம் எனத் தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் கடந்த 20 நாட்களாக திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்திற்கு வராமல் இருந்த ஸ்டாலின், அம்பேத்கர் படத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக இன்று சென்றார். அவருடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, வி.பி.துரைசாமி, ஆகிய நான்கு பேர் மட்டுமே இருந்தனர். சென்னையில் மாவட்டச் செயலாளர்களையோ, எம்.எல்.ஏ.க்களை ஊரடங்கு காரணமாக வரவேண்டாம் எனக் கூறிவிட்டார் ஸ்டாலின்.


அம்பேத்கர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய கையோடு, நாளை திமுக அறிவித்துள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்துவது பற்றி அண்ணா அறிவாலயத்தில் இருந்தவாறு ஆலோசனை மேற்கொண்டார் ஸ்டாலின். அனைத்துக் கட்சி கூட்டத்தின் வடிவதை காணொலிக்காட்சி மூலம் நடத்துவது பற்றியும் ஆலோசித்துள்ளார். இருப்பினும் எந்த வடிவத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் என்ற விவரத்தை திமுக இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

© All Copyrights NEW TREND MEDIA PRIVATE LIMITED 


Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited