டில்லி மாநாட்டில் பங்கேற்ற 10 பேர் மலேஷியா தப்ப முயன்ற போது கைது

சென்னை : : டில்லி மாநாட்டில் பங்கேற்ற, 10 பேர், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளாமல், மலேஷியாவிற்கு தப்பிச் செல்ல முயன்றனர்.


சென்னை விமான நிலையத்தில் அவர்களை, இந்திய குடியுரிமைத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.தொடர் விசாரணைக்காக, இந்த, 10 பேரையும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்க உள்ளனர்.சென்னையில் இருந்து, நேற்று காலை, 11:00 மணிக்கு, மலேஷிய தலைநகர், கோலாலம்பூருக்கு, 127 பயணியருடன், 'மலின்டோ ஏர்' சிறப்பு விமானம் இயக்கப்பட்டது. இந்த விமானத்தில் செல்ல வந்த, பயணியரின் ஆவணங்களை, குடியுரிமை துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அதில், 10 நபர்கள், மலேஷியா நாட்டில் இருந்து, 'சுற்றுலா விசா'வில், டில்லிக்கு வந்ததும், அங்கு நடந்த மத மாநாட்டில் பங்கேற்றதும் தெரிய வந்தது. இவர்கள், டில்லியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் சென்றுள்ளனர். பின், அங்கிருந்து சாலை வாயிலாக, தென்காசிக்கு சென்று, உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.இந்த, 10 பேரும், டில்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து, மலேஷிய துாதரகத்தின் உதவியுடன், நேற்று காலை, கோலாலம்பூருக்கு செல்ல, சென்னை வந்த தகவல், இந்திய குடியுரிமை துறை அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து, 10 பேரின் பயணத்தையும், குடியுரிமை துறை அதிகாரிகள் ரத்து செய்தனர்; அவர்கள் அனைவரையும், விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.அடுத்தகட்ட விசாரணைக்காக, இவர்களை, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்க, விமான நிலைய போலீசார் முடிவு செய்துள்ளனர். இவர்களிடம் நோய் தொற்று உள்ளதா என்பதை பரிசோதனை செய்ய, சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்பிறகே, இவர்கள் வாயிலாக, யார் யாருக்கு, தொற்று பரவியது என்பது தெரிய வரும். மலேஷியா செல்வதற்கு வசதியாக, டில்லியில் தனியார் மருத்துவரிடம், 'நோய் தொற்று இல்லை' என, மருத்துவ சான்றிதழ் வாங்கி வைத்துள்ளனர். அதன் நம்பகத்தன்மை குறித்தும் விசாரணை நடத்தப்பட உள்ளது.இதற்கிடையில், இவர்கள் மீது, மத பிரசாரம், விசா நடைமுறைகள் மீறல், அரசு தடையுத்தரவு மீறல் உள்ளிட்ட பிரிவுகளில், வழக்கு பதிவு செய்யப்பட உள்ளதாக, விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.
    © All Copyrights NEW TREND MEDIA Reserved

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited