தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்- தமிழக அரசு பரபரப்பு விளக்கம்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு மார்ச் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை 21 நாட்களுக்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு இரண்டாவது கட்டமாக நீட்டிக்கப்பட்டது.

அதன்படி மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு தொடரும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மேலும் ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகள், கொரோனா பாதிப்பே இல்லாத பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும் அறிவித்தார். ஊரடங்கு தளர்வு குறித்து வழிகாட்டும் நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு பின்னர் விவசாயம், தோட்டக் கலை, பண்ணைத் தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி, ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் வேலைக்கு செல்லலாம்.


சிறு, குறு தொழிலில் ஈடுபடுவோர் பணிகளை தொடரலாம். அது போல் கனரக வாகன பழுது பார்ப்பு கடைகளை திறக்க அனுமதி உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டன. எனினும் ஏப்ரல் 20இல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம்; ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நாளை முதல் மத்திய அரசு வெளியிட்ட தளர்வுகள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தமிழக அரசு ஒரு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி தமிழக அரசின் உத்தரவு வரும் வரை தற்போதைய நிலையே தொடரும். வல்லுநர் குழுவின் ஆலோசனைகள் நாளை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும். அந்த ஆலோசனைகளின் ஆராய்ந்த பிறகே தமிழக முதல்வர் முடிவெடுப்பார். அதுவரை கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்கலாம் என்பது குறித்து திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என முதல்வர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  ©All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED Reserved 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited