கொரோனா.. கல்வராயன்மலையில் தொடரும் கள்ள சாராய வேட்டை.. 6,200 லிட்டர் சாராயம் அழிப்பு!

கள்ளக்குறிச்சி: கள்ளகுறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் 6,200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை போலீசார் அதிரடியாக கண்டுபிடித்து அழித்தனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. ஒன்று அல்லது இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டாலே, குடிமகன்கள் மிகவும் அவதிப்படுவார்கள்.


அதுவும், தற்போது 20 நாட்களுக்கு மேலாக கடைகள் மூடப்பட்டுள்ளதால், சரக்கு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் கள்ளத்தனமாக மது விற்பனை மற்றும் கள்ளச்சாராய விற்பனை தமிழகத்தில் கொடிகட்டிப் பறக்கிறது. அவ்வபோது கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதனிடையே, ஊரடங்கை பயன்படுத்தி, கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் தற்போது கள்ளச்சாராயம் அதிகளவில் காய்ச்சப்படுகிறது.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப் பகுதியான கல்வராயன்மலையில் சுமார் 170 கிராமங்கள் உள்ளன. இந்த வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் ஓடும் தண்ணீரை பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் சாராயம் காய்ச்சி வருகின்றனர். கல்வராயன்மலை வனப்பகுதியில் காய்ச்சப்படும் சாராயம், அதனை சுற்றியுள்ள கச்சிராயப்பாளையம், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் ஆகிய பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வது தொடர்கதையாகி வருகிறது.ஊரடங்கால் கல்வராயன்மலை பகுதியில், முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு, அதிக அளவில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து 100 க்கும் மேற்பட்ட போலீசார் பரிகம், நல்லாத்தூர், கரடிசித்தூர், வடக்கநந்தல் ஆகிய பகுதிகளிலும், கல்வராயன்மலை அடிவார பகுதிகளான மாயம்பாடி, சின்னசேலம் அடி பெருமாள் கோவில், நாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் சோதனை சாவடி அமைத்து யாரேனும் சாராயம் கடத்தி செல்கிறார்களா? என சோதனை செய்து வருகின்றனர்.மேலும் மொட்டையனூர், விதுர், வேங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டபோது, 31 சாராய பேரல்களில், பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 6,200 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து, அதனை கீழே கொட்டி அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்சுவதற்காக அதே பகுதியில் உள்ள வைக்கோல் போரில் பதுக்கி வைத்திருந்த தலா 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டை வெல்லத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சாராயம் காய்ச்சிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
      © All Copyrights NEW TREND MEDIA PRIVATE LIMITED 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited