தொடர்ந்து கொரோனா நெகட்டிவ்.. நம்பிக்கை அளிக்கும் "சாரி டெஸ்டிங்".. தமிழகத்திற்கு சிறு வெளிச்சம்!

சென்னை: தமிழகத்தில் கடைசியாக இரண்டு வாரத்தில் மேற்கொண்ட ''சாரி'' வகை கொரோனா சோதனைகளில் மிக குறைவான பாசிட்டிவ் ரிசல்ட் மட்டுமே வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கிய தொடக்கத்தில் கொரோனா டெஸ்டிங் விதிமுறைகள் மத்திய சுகாதாரத்துறை மூலம் வகுக்கப்பட்டது. அதன்படி வெளிநாடு சென்று இந்தியா வந்தவர்களை தனிமைப்படுத்த வேண்டும். அவர்களுக்கு அறிகுறி இருந்தால் அவர்களை சோதனை செய்ய வேண்டும். கொரோனா ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டால் அவர் தொடர்பு கொண்ட நபர்களை தனிமைப்படுத்த வேண்டும். அப்படி தொடர்பு மூலம் தனிமைப்படுத்த நபர்களுக்கும் அறிகுறி தென்பட்டால் அவர்களை கொரோனா சோதனைக்கு உட்படுத்த வேண்டும். இதுதான் நாம் பின்பற்றிய வழிமுறை

காண்டாக்ட் டிரேஸ் செய்வது கடினம் 

அதாவது வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், அவர்கள் தொடர்பு கொண்டவர்கள், இவர்களில் யாருக்கு அறிகுறி இருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே கொரோனா சோதனை செய்யப்படும். ஆனால் இது கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவாது. உதாரணமாக இப்போதெல்லாம் அறிகுறி இல்லாமலே கொரோனா பரவும். அதேபோல், கொரோனா உள்ளவர்கள் தொடர்பு கொண்ட எல்லா நபர்களையும் காண்டாக்ட் டிரேஸ் செய்வது கடினம்.


ஸ்டேஜ் 3 பரவல் 
ஒருவருக்கு கொரோனா இருந்து அவர் தொடர்பு கொண்ட எல்லோரையும் கண்டுபிடிக்க முடியாமல் போனால் அது பெரிய சிக்கலாக மாறும். அவர் மூலம் பலருக்கு கொரோனா பரவும் நிலை ஏற்படும். இதுதான் சமூகம் பரவல் என்றும், ஸ்டேஜ் 3 என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஸ்டேஜ் 3யை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் ஒரு பகுதியில் ரேண்டம் சோதனை செய்ய வேண்டும்.


ரேண்டம் சோதனை செய்ய வேண்டும் 
உதாரணமாக சென்னை ராயப்பேட்டை பகுதியில் ஸ்டேஜ் 3யை தடுக்க வேண்டும் எண்டால், அங்கிருந்து ஒரு குறிப்பிட்ட 50-100 நபர்களுக்கு ரேண்டமாக சாம்பிள் எடுத்து சோதனை செய்ய வேண்டும். அதாவது வெளிநாடு செல்லாதவர்கள், கொரோனா உள்ளவர்களோடு தொடர்பு இல்லாதவர்கள், உள்ளவர்கள் என்று ரேண்டம் சாம்பிள் எடுத்து சோதனை செய்ய வேண்டும். இதில் வரும் முடிவுகளை வைத்து ஒரு சமூகத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பரவி உள்ளது. சமூக பரவல் இருக்கிறதா என்று கண்டுபிடிக்க முடியும்.


சாரி சோதனை
 இதற்குத்தான் சாரி டெஸ்ட் சோதனைகளை இந்தியா முழுக்க செய்கிறார்கள். இங்குதான் சாரி சோதனை கைகொடுக்கிறது. 'சாரி' என்று அழைக்கப்படும் தீவிர சுவாச நோய் தொற்று (severe acute respiratory illness- sari) அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்படும். அதாவது அறிகுறி எதுவுமே இல்லாமல் ரேண்டம் சோதனை செய்து சோதனை கிட்களை காலி செய்வதற்கு பதிலாக இப்படி தீவிர சுவாச நோய் தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்படும்.

எளிதாக கண்டுபிடிக்கலாம்
 இந்த சாரி சோதனை மூலம் சமூகத்தில் எத்தனை பேருக்கு கொரோனா பரவல் உள்ளது என்று கூறலாம். இதன் மூலம் ஸ்டேஜ் 3 பரவலை கண்டுபிடிக்க முடியும். இந்தியாவில் கடந்த மார்ச் கடைசி வாரத்தில் இருந்தே சாரி சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஏப்ரல் முதல் வாரம் வரை செய்யப்பட்ட சாரி சோதனைகளில் 5911 பேரில் 104 பேருக்கு கொரோனா இருந்துள்ளது. இதில் 40 பேர்க்கு வெளிநாட்டு பயண வரலாறோ அல்லது கொரோனா உள்ளவர்களோடு காண்டாக்ட் வரலாறோ இல்லை.

எத்தனை பாசிட்டிவ் 
இந்தியாவில் தமிழகத்தையும் சேர்த்து மொத்தம் 15 மாநிலங்களில் உள்ள 36 மாவட்டங்களில் இப்படி சாரி கேஸ் பாசிட்டிவ் என்று வந்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரம் வரை செய்யப்பட்ட 577 சாரி சோதனைகளில் 5 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று வந்துள்ளது. இதில் நிம்மதி அளிக்கும் விஷயம் இவர்கள் எல்லோரும் கொரோனா நோயாளிகளோடு தொடர்பு இருந்துள்ளது. இதனால் ஏப்ரல் தொடக்க வாரத்தில் தமிழகத்தில் சமூக பரவல் இல்லை.

நேற்று ஒரு பாசிட்டிவ்
 அதன் பின் கடைசியாக தமிழகத்தில் கடந்த 7 நாட்களாக கொரோனா சாரி சோதனை செய்யப்பட்டது. அதில் முதல் 6 நாட்களில் யாருக்கும் கொரோனா சாரி டெஸ்டில் பாசிட்டிவ் என்று வரவில்லை. நேற்று சென்னையில் ஒருவருக்கு சாரி டெஸ்ட் பாசிட்டிவ் என்று வந்தது. இவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று பலியானது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவருக்கு கொரோனா நோயாளி ஒருவரோடு தொடர்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சமூக பரவல் இல்லை 
தமிழகம் இந்த சாரி அறிகுறி உள்ளவர்களை தீவிரமாக சோதனை செய்து வருகிறது. இதுவரை சில சாரி அறிகுறி உள்ளவர்களுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. ஆனாலும் கூட யாரும் தொடர்பு இல்லமால் கொரோனாவால் பாதிக்கவில்லை. இதனால் தமிழகத்தில் ஸ்டேஜ் 3 பரவல் இல்லை என்று நேற்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சாரி அறிகுறி உள்ளவர்களை சோதனை செய்து வருகிறோம், இதுவரைய சமுதாய தோற்று இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் செய்ய வேண்டும்
 ஆனால் இந்த சாரி சோதனைகளை தமிழகம் அதிகம் செய்ய வேண்டும். எவ்வளவு எவ்வளவு அதிகமாக ரேண்டம் சாம்பிள்களை எடுத்து சோதனை செய்ய முடியுமோ அவ்வளவு அதிகமாக சோதனை செய்ய வேண்டும். அப்போதுதான் சமூக பரவல் இல்லை என்பதை உறுதியாக சொல்ல முடியும். தற்போது சாரி முடிவுகள் நெகட்டிவாக வருவது ஒரு வகையில் தமிழகத்திற்கு கிடைத்து இருக்கும் சிறு வெளிச்சம்.. இந்த வெளிச்சத்தை பின்பற்றி நாம் வேகமாக முன்னேற வேண்டும்.

© All Copyrights NEW TREND MEDIA PRIVATE LIMITED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited