சுங்க சாவடியை திறக்கும் உத்தரவை மத்திய அரசு உடனே திரும்பப் பெற சீமான் வலியுறுத்தல்

சென்னை: நாடு முழுவதும் சுங்க சாவடியை திறக்கும் முடிவை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
 நெருக்கடியான நேரத்தில் மக்களுக்கு உதவ வேண்டிய ஓர் அரசு அதற்கு மாறாக மக்களை வாட்டி வதைக்கும் செயலில் ஈடுபடுவது என்பது கொடுங்கோன்மை. அத்தகைய செயலில்தான் தற்போது மத்தியில் ஆண்டுகொண்டிருக்கும் பாஜக அரசு தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஊரடங்கில் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்குத் தேவையான உணவை வழங்காமல் அருகில் உள்ள மக்களை உதவச் சொல்லி தனது பொறுப்பைத் தட்டிக்கழித்தது மத்திய அரசு.

நாளை முதல் ஊரடங்கு தளர்வு 
தற்போது ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு காரணமாகப் பொது மக்கள் வீட்டிலேயே தனித்து இருந்து வருகிறார்கள். இக்கட்டான இச்சூழ்நிலையில் எந்தப் பணியோ, வருமானமோ இல்லாமல் கடும் சிரமத்திற்கும் ஆளாகியுள்ளனர். வரும் 20 தேதி முதல் சில பணிகளுக்கு ஊரடங்கு தளர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.


வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகிறது
 இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்ட நெருக்கடியிலிருந்து மக்கள் இன்னும் முழுவதுமாக விடுபடாத நிலையில் சுங்கச்சாவடிகள் செயல்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்றுள்ளது. சொந்த நாட்டிலேயே 50 கிலோ மீட்டருக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தி பயணம் செய்வதென்பது கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சிக்காலத்தில்கூட இல்லாத எதேச்சதிகார முறையாகும்.

சுங்க சாவடி கொள்ளை
 சுங்கச்சாவடி கட்டண முறையே முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டுமென்பதே மக்களின் தொடர்க் கோரிக்கையாக உள்ளது. அந்த அளவுக்கு சாதாரண நாட்களிலேயே சுங்கச்சாவடி கட்டணக் கொள்ளையால் பொதுமக்கள் அன்றாடம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வசூல் வேட்டையில் ஈடுபடும் ரௌடிகளைப் போல் அடாவடியான வழிப்பறிச் செயலில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களின் அநியாயச் சுங்கச்சாவடி கட்டணம் என்பது ஏற்றுக்கொள்ளவே முடியாத மக்களை வாட்டி வதைக்கும் பகற்கொள்ளையாகும்.

இன்னமும் கூடுதல் தடைகள்
 அதிலும் ஊரடங்கு முழுதாக நீக்கப்படாது, பொதுப்போக்குவரத்தும் தொடங்கப்படாத இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள், சிறு, குறு தொழில் செய்பவர்கள், வாடகை வாகனங்களில் பணிகளுக்குச் செல்லவேண்டிய நெருக்கடியான நிலையில் தற்போது உள்ளனர். அதுமட்டுமின்றி ஊரடங்கு நிலுவையில் உள்ள நிலையில் ஓர் இடத்திலிருந்து மற்றோரு இடத்திற்குச் செல்லும் ஏழை மக்கள் ஏதோ ஓர் இன்றியமையாத அவசர பயணத்தைத்தான் பல்வேறு தடைகள், காத்திருப்புகளைத் தாண்டி அனுமதிபெற்று, கடன் வாங்கியாவது பயணம் மேற்கொள்ள முற்படுகின்றனர்.

திரும்பப் பெற வேண்டும் 
அப்படிச் செல்லும் பரிதாபகரமான நிலையில் உள்ள மக்களை ஏதோ ஒரு தனியார் நிறுவனத்தின் இலாபத்தேவையை மட்டும் கருத்தில்கொண்டு மேலும் கசக்கி பிழிவதென்பது சிறிதும் மனித தன்மையற்ற செயலாகும். இந்தப் பேரிடர் காலகட்டத்தில் அவர்களுக்குத் தேவையான வாகன வசதி ஏற்படுத்தித் தந்து உறுதுணையாக இருக்க வேண்டிய மத்திய அரசு, அதற்கு நேர்மாறாக ஏழை, எளிய மக்களை வாட்டி வதைக்கும் வகையில், தனியார் நிறுவனத்திற்கு ஆதரவாக அவசர அவசரமாகச் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கிய கொடுஞ்செயல் கடும் கண்டனத்திற்குரியது. எனவே மத்திய அரசு, சுங்கச்சாவடிகள் செயல்படும் என்ற முடிவை மறுபரிசீலனை செய்து உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

  ©All Rights NEWTRENDMEDIA PRIVATE LIMITED Reserved 


 

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited