மீடியா முதல் ஐடி வரை.. கொரோனாவால் பாதிக்க போகும் 7 துறைகள்.. இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

சென்னை: கொரோனா காரணமாக முக்கியமான 7 துறைகள் மிக மோசமான பாதிப்புகளை சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். முக்கியமாக இந்தியாவில் இருக்கும் 7 துறைகள் பெரிய அளவில் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனாவால் கடந்த 90 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உலக பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்போகிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார். இதனால் உலகம் முழுக்க பல கோடி பேர் வேலை இழப்பார்கள்.
பல கோடி பேர் பல நாடுகளில் வேலை இழக்கும் நிலை ஏற்படும். மக்கள் உணவிற்கே கஷ்டப்படும் நிலை உலகம் முழுக்க ஏற்படும். 2020 மிக மோசமாக இருக்க போகிறது... இது கொரோனா பாதிப்பு குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டலினா ஜார்ஜிவா தெரிவித்த கருத்து ஆகும்.

உலகம் பாதிக்கும்

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டலினா ஜார்ஜிவா கூறுவது போல உலகம் முழுக்க பெரிய அளவில் வேலை இழப்புகள் நடக்க உள்ளது. உலக நாடுகளில் பலவற்றில் இதற்கான பணிகள் தொடங்கி விட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் பணியாளர்களை வீட்டிற்கு அனுப்ப இப்போதே அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு இப்போது விசா தொடர்பான அழுத்தங்கள் அதிகரித்து வருகிறது.
இந்தியா விதிவிலக்கு
 அமெரிக்காவில் ஏற்கனவே 3 கோடி பேர் நிரந்தர மற்றும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஐஎம்எப் தெரிவிக்கிறது. இதற்கு இந்தியா மட்டும் விதி விலக்கு இல்லை. இந்தியாவிலும் விரைவில் இந்த பொருளாதார மந்த நிலை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். கொரோனா காரணமாக பல்வேறு துறைகள் மிக மோசமாக பாதிக்கப்படும். பலர் வேலையை இழக்கும் நிலை ஏற்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
மீடியா துறை பாதிக்கும்
 கொரோனா காரணமாக அதிகம் பாதிக்கப்பட போவது மீடியா துறைதான். மீடியா எனில் சினிமா, சின்னத்திரை, செய்தி நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள் எல்லாம் பாதிக்கப்படும். இப்படிப்பட்ட மீடியா துறைகள் எல்லாம் விளம்பரங்களை நம்பித்தான் இருக்கிறது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக இவர்களுக்கு விளம்பரங்கள் கிடைப்பது இல்லை. அதேபோல் இந்த நிறுவனங்கள் கடந்த ஒரு மாதமாக சரியாக இயங்க முடியாத அளவிற்கு கட்டுப்பாடுகள் உள்ளது. சினிமா, சீரியல்கள் முடங்கி உள்ளது. இதனால் மீடியா துறைதான் முதலில் பணி நீக்கங்களை சந்திக்கும்.

ஐடி நிறுவனங்கள் பாதிக்கும்
 அதேபோல் மீடியா துறைக்கு அடுத்தபடியாக அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் கிளைகளை அமைத்து இயங்கி வரும் ஐடி நிறுவனங்கள் பாதிக்கும். இந்த நிறுவனங்கள் எல்லாம் அமெரிக்காவில் ஏற்பட்டு இருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கள் பணியாளர்களை நீக்குவார்கள். அவர்களின் முதல் குறி இந்தியா போன்ற வெளிநாடுகளில் பணியாற்றும் நபர்களாகத்தான் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஐடி துறை இதில் இருந்து மீண்டு வர பல வருடங்கள் ஆகும்.


வெளிநாடு நிறுவனங்கள் அதிகம் பாதிக்கும் 
பல ஐடி ஊழியர்கள் சம்பளம் இன்றி வேலை பார்க்கும் நிலை ஏற்படும். அதேபோல் வேறு சில வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள். மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் பலர் இதனால் நேரடியாக பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. மத்திய கிழக்கு நாடுகள் கொரோனா காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எப்படி 
அதேபோல் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உட்பட நிறைய உற்பத்தி நிறுவனங்கள் இந்த கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட உள்ளது. இந்தியாவில் ஏற்கனவே ஆட்டோமொபைல் துறை பெரிய அளவில் பாதிப்புகளை சந்தித்து இருந்தது. தற்போது கொரோனா காரணமாக மேலும் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் இழக்கும் வருவாயை சமாளிக்கும் பொருட்டு பணியாளர்கள் பலர் நீக்கப்படுவார்கள்.

டூரிசம் பெரிய அளவில் பாதிக்கும் 
உலகம் முழுக்க கொரோனா காரணமாக மக்கள் வெளியூர் செல்வதை தவிர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக கொரோனா அச்சம் காரணாம் மக்கள் இன்னும் அடுத்த சில மாதங்களுக்கு வெளிநாடு, வெளியூர் செல்ல மாட்டார்கள். இதனால் சுற்றுலாத்துறை நேரடியாக பாதிக்கும். இதனால் சுற்றுலாத்துறையை நேரடியாக நம்பி இருக்கும் தங்கும் ஹோட்டல்கள், உணவகங்கள் எல்லாம் மிக மோசமான சரிவை சந்திக்கும். இங்கு அதிக அளவில் பணியிட நீக்கங்கள் ஏற்படும்.

பட்டியலில் இல்லாத துறைகள்
 இது மட்டுமின்று பட்டியலில் இல்லாத துறைகளான ஜவுளி துறை, அழகுசாதன பொருட்கள் உற்பத்தி துறை, மீன்வளத்துறை மோசமாக பாதிக்கும். தினமும் சம்பளத்தை நம்பி இருக்கும் துறைகள் சரிவை சந்திக்கும். கட்டிடத்துறைகள் பெரிய அளவில் பணி நீக்கங்களை செய்யும் என்கிறார்கள். கொரோனா நேரடியாக பாதிக்கும் மக்களை விட இப்படி மறைமுகமாக பலரை பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

© All Copyrights NEW TREND MEDIA PRIVATE LIMITED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited