நேரடியாக உதவி செய்யத் தடை... அரசியல் கட்சிகள் தொடர்ந்த பொதுநல வழக்கு... நாளை தீர்ப்பு

சென்னை: கொரோனா நிவாரண உதவிகளை அரசியல் கட்சிகளும் தன்னார்வலர்களும் நேரடியாக செய்ய விதிக்கப்பட்ட தடையை அகற்றக்கோரி திமுக, மதிமுக, காங்கிரஸ் தொடர்ந்த பொதுநல வழக்கில் நாளை தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை அரசியல் கட்சிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் வழங்கி வருகின்றன. இவ்வாறு வழங்குவது 144 தடை உத்தரவுக்கு எதிரானது எனக் கூறி, சென்னை மாநகராட்சி ஆணையர், மக்களுக்கு நேரடியாக உணவுப் பொருட்களையும், அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களையும் வழங்க அரசியல் கட்சிகளுக்கும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தார். பின்னர் அந்த உத்தரவில் திருத்தங்கள் செய்து தடை என்பதை கட்டுப்பாடுகளாக மாற்றி உத்தரவிடப்பட்டது

இந்த உத்தரவை எதிர்த்து திமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்டோர் சார்பில் பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது. அவர்களது மனுக்களில், பாதிக்கப்பட்டுள்ள விளிம்பு நிலை மக்களுக்கும், தினக்கூலிகளுக்கும் உதவும் வகையில், அவர்களுக்கு உணவு மற்றும் மளிகைப் பொருட்களையும், மருந்துப் பொருட்களையும் வழங்கி வருவதாகவும், அப்போது சமூக விலகல் பின்பற்றப்படுவதாகவும், முககவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தே உதவிகள் வழங்கப்பட்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.சுப்பைய்யா, ஆர்.பொங்கியப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி 130 கோடி மக்களை அரசு மட்டுமே முழுமையாக அணுகமுடியாது என்றும், உதவி வேண்டுபவர்களுக்கு தேவையானவற்றை சக குடிமகன்கள் வழங்க வேண்டுமென பிரதமரே அறிவுறுத்தியுள்ளதை சுட்டிக்காட்டி வாதிட்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை மக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள் என்றும், அப்படி சென்று வழங்கும்போது கைது நடவடிக்கையும் மேற்கொள்வதாக வாதிட்டார். கைது செய்யப்பட்டவர்களையும் பட்டியலையும் தாக்கல் செய்தார். அப்போது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி மற்ற இக்கட்டான கால கட்டங்கள் போலவோ அல்லது இயற்கை பேரிடர் காலம் போன்றோ தற்போதைய நிலை இல்லை என்றும், மிகவும் ஆபத்தான கொடிய பேரிடராக கொரோனா தொற்று உள்ளதால் அவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஒரு தன்னார்வலர் உணவு வழங்க சென்றால் அதை வாங்க 300க்கும் அதிகமான மக்கள் கூடுகிறார்கள் என கூறி அதற்கு புகைப்பட ஆதாரங்களையும் தாக்கல் செய்தார். அவ்வாறு கூடும்போது நோய் தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ளதால் இதை அனுமதிக்க கூடாது என்றும், பதில் மனுத் தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.

© All Copyrights NEW TREND MEDIA PRIVATE LIMITED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited