3 நிறத்தில் அனுமதி சீட்டு அரியலுாரில் அறிமுகம்

பெரம்பலுார் : தமிழகத்தில் முதல் முறையாக, அரியலுார் மாவட்டத்தில், அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு, வீட்டை விட்டு வெளியில் செல்வோருக்கு, மூன்று வண்ணங்களில், அனுமதி சீட்டு வழங்கப்பட்டு உள்ளது.கொரோனா பரவலை தடுக்கும் வகையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பொதுமக்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வேண்டும் எனக் கூறி, பலரும், வெட்டியாக வீதிகளில் சுற்றி திரிகின்றனர்.இவர்களை கட்டுப்படுத்தும் பொருட்டு, அரியலுார் கலெக்டர், ரத்னா உத்தரவின்படி, 201 கிராம பஞ்சாயத்துகளில் வசிக்கும், 1 லட்சத்து, 97 ஆயிரத்து, 614 குடும்பங்களுக்கும் அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.இதன்படி, அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக செல்வோருக்கு, நீலம், பச்சை மற்றும் ரோஸ் வண்ணங்களில், கிராம பஞ்சாயத்து அலுவலர்கள் மூலம், வீடு வீடாக அனுமதி சீட்டு வழங்கப்பட்டுஉள்ளது.

பச்சை வண்ண அட்டை வைத்துள்ளவர்கள், திங்கள் மற்றும் வியாழன், நீல வண்ண அட்டை வைத்துள்ளவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளி. ரோஸ் வண்ண அட்டை வைத்து உள்ளவர்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளில், காலை, 6:00 முதல் மதியம், 1:00 மணி வரை வெளியே வந்து, அத்தியாவசியப் பொருட்கள் வாங்கி செல்லலாம்.இதில் இருந்து, மருத்துவம் மற்றும் அவசர தேவைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். இந்த நடைமுறை, இன்று முதல் அமலுக்கு வருகிறது.தமிழகத்திலேயே முதல் முறையாக, அரியலுார் மாவட்டத்தில் அமலுக்கு வந்துள்ள இந்த அனுமதி சீட்டு முறை, பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
                     © All Copyrights NEW TREND MEDIA Reserved

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited