கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி தருக... அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: கொரோனோ வைரஸ் தொற்றால் தமிழகத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ. 1 கோடி நிவாரண நிதி அளிக்க வேண்டும் என திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய துரிதப் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக திமுக அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. அதன்படி நேற்று அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நடைபெறவிருந்த நிலையில் அதற்கு காவல்துறை அனுமதி தர மறுத்தது.
இதையடுத்து காணொலிக் காட்சி மூலம் திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இன்று காலை 11 மணியளவில் காணொலிக்காட்சி மூலம் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்திய ஸ்டாலின், அதில் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஏற்படுத்த வேண்டிய வாழ்வாதாரங்கள், கொரோனா தடுப்பு பணிகள் பற்றி அனைத்துக் கட்சி தலைவர்களுடன் ஆலோசித்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன், பாலகிருஷ்ணன், முத்தரசன், ரவி பச்சமுத்து, உள்ளிட்டோர் தங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைத்தனர். இறுதியாக கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி தமிழக அரசு நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 சிறப்பு நிவாரண நிதி அளிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காணொலிக் காட்சி மூலம் கூட்டம் நடத்தப்பட்டதால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே இதில் கலந்துகொண்டனர். இதனிடையே திருமாவளவன் டெல்லியில் இருக்கும் சூழலில் அங்கிருந்தவாறே இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்.

© All Copyrights NEW TREND MEDIA PRIVATE LIMITED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited