சென்னையில் தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் 27 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. லைவ் தற்காலிகமாக நிறுத்தம்

சென்னை: சென்னையில் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றும் ஊழியர்கள் 27 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
திங்கள்கிழமை மாலை நிலவரப்படி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை 1520 ஆக உள்ளது. தமிழகத்திலேயே மிக அதிகபட்சமான பாதிப்பு சென்னை, கோவை மற்றும் திருப்பூரில் உள்ளது. இந்த நகரங்களில் 100க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உள்ளது.
தமிழகத்தின் மற்ற நகரங்களை ஒப்பிடும் போது சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதுவரை சென்னையில் கொரோனாவால் 308 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ராயபுரத்தில் மட்டும் 92 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

95 பேருக்கு சோதனை

சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி சேனலில் பணியாற்றும் இரண்டு செய்தியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உடனடியாக பாதிப்பு ஏற்பட்ட குறிப்பிட்ட சேனலில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் (95 பேருக்கும்) கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 95 பேரில் 27 பேருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த சேனலில் தற்போது தற்காலிமாக லைவ் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

27 ஊழியர்கள் குடும்பத்தினர்

இதையடுத்து 27 ஊழியர்களின் குடும்பத்தினர் , அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அனைவரையும் தொடர்பு தடமறிதல் முறை மூலம் உடனடியாக தீவிரமாக தேடி தனிமைப்படுத்தும் முயற்சியில் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் ஒரே நேரத்தில் 27 ஊடகவியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

முடிவுகளுக்கு காத்திருப்பு

எனவே சென்னையில் ஊடகத்துறையினர், பத்திரிக்கைத்துறையினர் என அனைத்து செய்தியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று ஒரு நாளில் மட்டும் செய்தியாளர்கள், புகைப்படக்கலைஞர்கள், கேமராமேன்கள், அலுவலக பணியாளர்கள், வீடியோ செய்தியாளர்கள் என 295 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகளும் வெளியாக வேண்டி உள்ளது. இந்த முடிவுகள் வெளியானால் எத்தனை செய்தியாளர்களுக்கு சென்னையில் கொரோனா இருக்கிறது என்பது தெரியவரும்.

அறிக்கை அளிக்க வேண்டுகோள்

முன்னதாக மும்பையில் 53 செய்தியாளர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. நாடு முழுவதும் செய்தியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதும் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு பெரும் கவலையையும் சவால்களையும் ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக செய்தியாளர் சந்திப்புக்கு பதில் அறிக்கைகளை அனுப்புமாறு பத்திரிக்கையாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

கொரோனா இல்லை

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று 40 அச்சு, காட்சி ஊடக புகைப்படக்கலைஞர்கள், ஒளிப்பதிவாளருக்கு திருச்சி அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் ரேபிட் டெஸ்ட் கருவியின் மூலம் கொரோனா பரிசோதனை செய்தனர்.இதில் திருச்சியில் பல்வேறு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் நாளிதழில் பணிபுரியும் போட்டோகிராபர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகியோர் கலந்து கொண்டார்கள். இதில் எடுத்த அனைவருக்கும் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited