தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா.. பாதிப்பு எண்ணிக்கை 1,267 ஆக உயர்வு.. முதல்வர்

சென்னை: தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,267 ஆக உயர்ந்துள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவி வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை செய்தார். அந்த ஆலோசனைக்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. தமிழக அரசு முன்கூட்டியே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.


கொரோனா தடுப்பு
 ரூ146 கோடிக்கு கொரோனா தடுப்பு மருந்துகள் வாங்க ஆணை வழங்கப்பட்டது. கொரோனா நோய் தடுப்புக்கு 12 முறை ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்று எளிதாக பரவும் என்பதால் மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. கொரோனா தொற்றை தடுப்பதுதான் மிகவும் முக்கியம். அதைத்தான் அரசு செய்து வருகிறது.

பரிசோதனைகள்
 தமிழகத்தில் கொரோனாவை தடுக்க 12 குழுக்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி ஆட்சியர்களிடம் கேட்டறிந்தேன். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 3,371 வென்டிலேட்டர்கள் உள்ளன. பரிசோதனைக்கான பிசிஆர் கருவிகள் 68 ஆயிரம் உள்ளன.


5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் 
புதிதாக 35 ஆயிரம் பிசிஆர் கருவிகள், 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரேபிட் டெஸ்ட் கிட் இந்தியாவில் எந்த மாநிலத்துக்குமே வரவில்லை. இன்னும் சில நாட்களில் கொரோனாவின் தாக்கம் முழுமையாக குறைந்துவிடும். தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 25 பேர் பாதிக்கப்பட்டனர்.

பலி எண்ணிக்கை 15 உயர்வு

 பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,267 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பலியானோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துவிட்டது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது. நாள்தோறும் சராசரியாக 5,590 பேருக்கும் பரிசோதனை செய்யும் வசதி தமிழகத்தில் உள்ளது. சென்னையில் 4,900 தள்ளுவண்டிகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன என்றார் முதல்வர்.

© All Copyrights NEW TREND MEDIA PRIVATE LIMITED

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited