144 தடை உத்தரவை கடைப்பிடிக்காதவர்களுக்கு 'இனி சாட்டைதான்!' வீறுகொண்டு எழுகிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: தமிழகத்தில், 144 தடை உத்தரவை பொருட்படுத்தாமல், சாலைகளில் நடமாடுவோருக்கு, இனி சாட்டை அடி காத்திருக்கிறது. ''வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என, எவ்வளவு சொன்னாலும், சிலர் கேட்பதில்லை. இனிமேல், சட்டம் தன் கடமையை செய்யும்,'' என, முதல்வர் பழனிசாமி வீறுகொண்டு எழுந்துள்ளார். தமிழகத்தில், கொரோனா வேகமாக பரவுவதால், அவர் கடும் வேதனை அடைந்துள்ளார்.

சென்னை, ஆர்.ஏ.புரம்; சூளை, கண்ணப்பர் திடல்; வேளச்சேரி, குருநானக் கல்லுாரி ஆகிய இடங்களில், தங்க வைக்கப்பட்டுள்ள, வெளி மாநில தொழிலாளர்களை, முதல்வர், பழனிசாமி நேற்று சந்தித்து, அவர்களுக்கு அரசு சார்பில் உதவிகள் வழங்கினார்.

பின், அவர் அளித்த பேட்டி: கொரோனா தீவிரத்தை உணராமல், சிலர் விளையாட்டுத்தனமாக, வாகனங்களில் சுற்றி வருகின்றனர். நோயின் தாக்கத்தை உணர வேண்டும். நோயை கட்டுப்படுத்த, அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தடை உத்தரவை மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. மக்களை துன்புறுத்த, 144 தடை உத்தரவு போடப்படவில்லை; அனைவரும் பாதுகாப்பாக இருக்க போடப்பட்டு உள்ளது.கடும் நடவடிக்கை:
அதை மனதில் வைத்து, மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தங்களை வீட்டில், தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் வாங்க, தினசரி செல்லக் கூடாது. ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை, வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்; இதை கடைப்பிடிப்பது, பொது மக்கள் கடமை.

எவ்வளவு சொன்னாலும், சிலர் கேட்பதில்லை. இனிமேல், சட்டம் தன் கடமையை செய்யும். பொது மக்களுக்கு, அரசு ஒத்துழைப்பு தருகிறது; இதை, சரியாக பயன்படுத்த வேண்டும். தடை உத்தரவை கடுமையாக்குவதை தவிர, வேறு வழியில்லை; மீறுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்தியாவசிய பொருட்களுக்கு, எந்த தடையுமில்லை. மளிகை பொருட்கள், வேறு மாநிலத்தில் இருந்து வர வேண்டியுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் எடுத்து வரும் வாகனங்கள், அதிகம் இயக்கப்படவில்லை. இதனால், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

வருவாய் பாதிப்பு:
'எந்த மாநிலமும், அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்ல, தடை விதிக்கக் கூடாது' என, பிரதமர் கூறியுள்ளார். எனவே, நிலைமை சரியாகி விடும். மளிகை பொருட்களை, அதிக விலைக்கு விற்றால், நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக்கு வரும், ஜி.எஸ்.டி., வரி வருவாய், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அரசு ஊழியர்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்படாது. வெளி மாநிலத்தில் இருந்து வந்து பணிபுரிகிற, 1.34 லட்சம் பேருக்கு, தேவையான வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

தனிக்குழு:
அதேபோல், பிற மாநிலங்களில் பணிபுரியும், தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு, தேவையான உதவிகளை செய்யும்படி, அந்தந்த மாநில முதல்வர்களை கேட்டுள்ளேன். வெளி மாநிலங்களில் உள்ள, தமிழக தொழிலாளர்களுக்கு உதவ, தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாநில அரசுடன் பேசி, உதவி செய்து வருகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.

டோக்கனுடன் ரூ.1,000!


ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு, 1,000 ரூபாய், 15 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய், இலவசமாக வழங்கப்படுகின்றன. இவற்றை வாங்க, மக்கள் கூடுவதை தவிர்க்க, அவர்களுக்கு வீடுகளில், டோக்கன் வழங்கும் போதே, 1,000 ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு அங்கீகாரம் பெற்ற பத்திரிகையாளர்களுக்கு, 3,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், முதல்வர் தெரிவித்தார்.
                © COPYRIGHTS NEWTRENDMEDIA ALL RIGHTS RESERVED
   

Post a comment

0 Comments

All Rights Reserved NewTrendMedia Private Limited